என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Sunday, July 10, 2011

ஆரண்ய காண்டம் - எனது பார்வையில்.....


நான் வலைப்பதிவு தொடங்கி தமிழில் எழுதும் முதலாவது பதிவு இது. ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படம் பற்றி ஏதாவது எழுதியே ஆகவேண்டும் என்ற அளவு இந்த திரைப்படம் என்னை பாதித்து இருக்கிறது. இந்திய சினிமாவை வேறு ஒரு பாதைக்கு அழைத்து செல்லும் திரைப்படம் இது எனலாம். 

பாத்திரங்களின் நேர்த்தி, படத்தொகுப்பு, பின்னணி இசை, வசனங்கள் என அனைத்துமே ஆங்கில படங்களுக்கு இணையாக அமைக்க பட்டிருக்கிறது. இத்தனைக்கும் படத்தின் இயக்குனர் ஒரு அறிமுக இயக்குனராம். நம்பவே முடியவில்லை. சரி படத்தின் கதை தான் என்ன.? ஒற்றை வரியில் சொல்வதானால் "நிழல் உலக கோஷ்டிகளின் ஒரு நாள் வாழ்க்கை". நிழல் உலக கோஷ்டி ஒன்றின் தலைவர் சிங்கம்பெருமாள் ( ஜாக்கி ஷெரப் ). அவருக்கு கீழ் வேலை செய்யும் பசுபதி (சம்பத்) ஒரு நாள் காலை அவரை ஒன்று சொல்லிவிட சம்பத்தை கொல்ல சொல்கிறார் ஜாக்கி. அதிலிருந்து சம்பத் எவ்வாறு தப்பிக்கிறார் என்பதும் அதனிடையே பின்னப்பட்டுள்ள பாத்திரப் படைப்புக்களும் திரைப்படத்தை வேகமாகக் கொண்டு செல்ல கிளைமாக்ஸ் என்ன என்பதே கதை...

ஆங்கில படம் எதோ ஒன்றின் தழுவலாக இருந்தாலும் தமிழ் சினிமாவின் வரவேற்கத்தக்க இப்படியான முயற்சிகளை பாராட்டியே ஆக வேண்டும். ஜாக்கியின் இச்சையை தீர்க்கும் பெண்ணாகவும், படத்தின் திருப்பு முனையாகவும் அமையும் ஜாஸ்மின் பொன்னப்பா நிச்சயம் கவனிக்கப் பட வேண்டியவர். சப்பை பாத்திரத்தில் ரவி கிருஷ்ணா கன கச்சிதம். கொடுக்கா புளி என்னும் சிறுவனும் அவனது தந்தையாக வருபவரும் தத்தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

சம்பத்தை துரத்தும் காட்சி, கிளைமாக்ஸ் சண்டை, சேவல் சண்டை போன்ற இன்னும் எத்தனையோ இடங்கள் மனதை விட்டு அகலாமல் நிற்கின்றன. படத்தின் பெரும்பாலான இடங்களை பின்னணி இசை ஆட்சி கொள்கிறது. யுவனுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையலாம். வசனங்களின் நேர்த்தி மனதில் நிற்கின்றது.  "அப்பான்னா ரொம்ப பிடிக்குமோ -  இல்லை ஆனா அவர் என் அப்பா", "சப்பையும் ஒரு ஆம்பள தான், எல்லா ஆம்பளைங்களும் சப்ப தான்" , "கட்டின பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க துப்பில்ல , நீ எப்படி என் அப்பாவ காப்பாத்துவ?" போன்றவை வசன கச்சிதங்களுக்கு உதாரணம். 

எனக்கு இந்த திரைப்படத்தில் குறைகள் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. ஏன் இலங்கையில் திரையரங்கில் போடவில்லை என்றும் தெரியவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 

ஆரண்ய காண்டம் -  இராமாயணத்தின் நவீன காண்டம். 

2 comments: