என் மனதில் பட்டதை, நான் ரசித்த திரைப்படங்களை, சில பொறியியல் விடயங்களை,நானறிந்த சில விளையாட்டு விபரங்களை மற்றும் எனது வேலை சம்பந்தமான சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்..... திருத்தங்களுக்கு உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்......

Wednesday, May 8, 2013

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் புனரமைப்புக்கு ஹங்கேரி ரூபா 6 பில்லியன் நிதியுதவி



கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களின் குடி நீர்த் தேவையானது அம்பத்தாலே, லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது. லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 1886 ம் ஆண்டும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் 1957 ம் ஆண்டும் நிர்மாணிக்கப் பட்டது. இவ்விரண்டு நிலையங்களினாலும் கொழும்பு மற்றும் அண்டிய பகுதிகளின் 13.5% நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகின்றது. தற்போது லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 45,000 கனமீற்றர் நீரும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 52,000 கனமீற்றர் நீரும் உற்பத்தி செய்கின்றன. கொழும்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சனத்தொகைப் பெருக்கமானது மேலதிக நீர்த் தேவைக்கு வித்திட்டுள்ளது.

இன்னொரு புறத்தில் மூல நீர் மாசடைதல், மணல் வடிகட்டிகளின் (Sand Filters) குறைந்த வினைத் திறன் போன்ற காரணங்களால் இவ்விரு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறன் குறைவடைந்துள்ளது. எனவே ஏற்கனவே உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், அதிகரித்து வரும் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய உதவும். லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உயர் நிலமட்டங்களில் அமைந்துள்ளதால் இந் நிலையங்களின் புனரமைப்பு, கொழும்பு பகுதிகளுக்கு குறைந்த செலவில் நீரை விநியோகிக்கவும் குறைந்தளவான பராமரிப்புக்கும் உதவும்.

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் 


இலங்கை அரசாங்கம், ஹங்கேரி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கிக்கு (Hungarian Exim Bank) விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஹங்கேரி அரசாங்கமானது இலங்கைக்கு லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் புனரமைப்புக்காக 35 மில்லியன் யூரோ பணத்தை வழங்க முன்வந்துள்ளது.

இந்த செயற்றிட்டத்தின் கீழ் இவ்விரு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடு அதி நவீன தொழிநுட்பத்திற்கு மாற்றப்படும். நாள் ஒன்றுக்கான உற்பத்தியானது லபுகம நிலையத்திற்கு 60,000 கனமீற்றர்களாகவும், கலட்டுவாவ நிலையத்திற்கு 90,000 கனமீற்றர்களாகவும் உயர்த்தப்படும். மொத்த நீர் உற்பத்தி அளவானது நாளொன்றுக்கு 53,000 கனமீற்றர்களாக மேம்படுத்தப் படவுள்ளது. மொத்தமாக 700,000 நபர்களின் நீர்த் தேவையானது கொழும்பு மாநகரம், ஜா-எல, மஹரகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, பிலியந்தல, மெத்தேகொட மற்றும் பியகம பகுதிகளில் பூர்த்தி செய்யப் படவுள்ளது.

லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையம் 


தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் கீழ் 2015 ஆம் ஆண்டளவில் இச் செயற்றிட்டத்தை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் வளம் முடிவடையகூடியது..... அதை தேவைக்கேற்ப பாவிப்போம்.....

No comments:

Post a Comment