கடந்த 10 ஆந் திகதி (10.06.2013) அன்று எங்கள் வீட்டில் (கல்முனையில்) காலை வேளை எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். அன்று தான் அம்மாவுக்கு கல்முனை ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதுக்காக பாடசாலையால் நடாத்தப்படும் "சேவை நலன் பாராட்டு விழா".... நானும் கலந்து கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லியாகி விட்டதால் அன்று லீவு போட்டு வந்து விட்டேன். குடும்பத்தில் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். வீட்டிற்கு கார் அனுப்பி அவர்களே வந்து அம்மாவை அழைத்துச் சென்றார்கள்...
பாடசாலைக்கு ஒரு அரை கிலோமீட்டர் முன்பாகவே பேண்ட் வாத்தியங்களுடன் வரவேற்பு ஆரம்பமாகியது.. முதலில் மேலைத்தேய பேண்ட் வாத்தியம் பின்னர் எமது கலாசார பேண்ட் வாத்தியம் அதன் பின்னர் நடனக்குழு என அழைத்து சென்று பாடசாலை வளாகத்தினுள் சாரணர் வரவேற்பும் வழங்கப்பட்டது... எல்லோரும் மண்டபத்தினுள் சென்ற பின்னர் உட்புகுந்த என்னைப் பிடித்து முன் வரிசையிலேயே உட்கார வைத்து விட்டனர்... முதலில் மங்கள விளக்கு ஏற்றும் வைபவம்... எனக்கு எந்த புதிய வகை விளக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது... நல்லதொரு யோசனை அந்த விளக்கு...
அடுத்து பாடசாலை கீதம் இசைக்கப்பட்டது... எனக்குப் புரியாத விடயம் என்னவென்றால் மங்கள விளக்கு ஏற்றும்போதும் சரி பாடசாலை கீதம் இசைக்கும் போதும் சரி யாருமே எழுந்து நிற்கவில்லை.... ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்களினால் ஒரு பாடல் இசைக்கப் பட்டது.. வரிகளும் இசையும் இனிமையாகவே இருந்தன... பின்னர் இப்பாடசாலையின் அதிபர் ஆற்றிய தலைமை உரை சிறு பிழைகள் இருந்தாலும் சுருக்கமாக முடிக்கப் பட்டது...
பின்னர் சிறப்பு அதிதியாக அழைக்கப் பட்டிருந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்கள் உரையாற்றினர்... மிகவும் அழுத்தமாக அமைந்த அவரத்து உரையில் பல விடயங்களை சுட்டிக்காட்டினார்... உதாரணமாக கல்முனை மாநகரில் இருக்கும் ஜாம்பவான் பாடசாலைகளுடன் போட்டி போட்டது, அவர் வலய கல்விப் பணிப்பாளராக இருக்கும் பொது இப்பாடசாலைக்காக அம்மா போட்ட சண்டைகள் என பல விடயங்களை சுட்டிக் காட்டினார்.. இவரது குரலும் மிகவும் கம்பீரமாக இருந்தது....
இதன் பின்னர் அம்மாவுக்கு இவரால் ஒரு நினைவுச் சின்னம் வழங்கப்பட்ட போது என்னையும் மேடைக்கு கூப்பிட்டார்கள்.... ஏன்யா உங்களுக்கு நான் என்ன பண்ணினேன்..?? என்ன பாசம்...... இதன் பின்னர் கல்முனை தமிழ் கோட்டக் கல்வி அதிகாரி, பட்டிருப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபர் திரு.நாகராஜா, கல்முனை வலய கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் என பலர் உரையாற்றினர்.... இந்த நிகழ்வை தொகுத்து வழங்கியவர் இடையிடையே உரையாற்றியோரின் சில முக்கிய குறிப்புக்களை எடுத்துக்காட்டியது சிறப்பாக இருந்தது...
அம்மாவைப் பற்றிய காணொளி ஒன்று காட்டப் பட்டது... இதில் அம்மாவின் பல பழைய புகைப் படங்கள் காட்டப்பட்டன... ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தாலும் போக போக ஒரே மாதிரியான படங்கள் அதாவது பேசுவது போல், பரிசளிப்பது போல் தொடர்ந்து வந்தது சற்று நீளம் கூடிய உணர்வைத் தந்தது.. ஒருவேளை எந்த நிகழ்வு என தலைப்பு இட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்...
இதன் பின்னர் நூல் வெளியீடு இடம்பெற்றது... கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. அஜ்மல் கான் இதை தொகுத்து வழங்கினார்... இவர் உள்ளடக்கங்களை மேலோட்டமாக விவரித்ததுடன் தான் எழுதிய ஒரு கவிதையையும் வாசித்துக் காட்டினார்.. பின்னை கல்லூரி அதிபர் முதற் பிரதியை அம்மாவுக்கு வழங்க பின்னர் அம்மா அனைவருக்கும் புத்தகங்களை வழங்கினார்... எனக்கும் மேடையேற்றி ஒரு பிரதி கிடைத்தது.... இந் நூலிலே பலர் அம்மாவை பாராட்டி வாழ்த்து செய்திகளும் கவிதைகளும் வரைந்திருந்தனர்... "தண்ணொளி" எனப் பெயரிடப் பட்ட இந்நூலின் வடிவமைப்பும் நன்றாகவே இருந்தது...
இதன் பின்னர் ஒரு தனி நடனம் இடம்பெற்றது... நடனமாடிய செல்வி. கனிஷ்கா சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்தினார்.. இதில் நான் ரசித்த இன்னொரு விடயம் யாதெனில் நடன ஆசிரியை திருமதி. நிர்மலா மேடையின் ஒரு பக்கத்தில் இருந்து தாளம் தட்டிக்கொண்டு இருந்தாலும் நடனமாடுபவரின் உடல் அசைவுகளுக்கு ஏற்ப அவரது முகமும் கண்களும் அசைந்துகொண்டிருந்தன... ஷோபனா மாதிரியே இருந்தாங்க... நிகழ்ச்சி நடனம் நன்றாக இருந்தது என அவர்களிடம் கூறி விட்டு தான் வந்தேன்...
இதன் பின்னர் இடம்பெற்றது அம்மாவை கௌரவிக்கும் நிகழ்வு... முன்னாள் ஆசிரியர்கள், இந்நாள் ஆசிரியர்கள், ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் தம்மாதுண்டு மாணவர் முதல் பெரிய மாணவர் வரை அனைவரும் பூமாலைகள், பொன்னாடைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கினார்கள்..... அம்மா கழுத்து முழுக்க மாலைகள் நிரம்பியிருக்க மேடையில் நின்றதை பார்க்கும் பொது ரொம்ப பெருமையாக இருந்தது.....
இறுதியாக அம்மாவின் உரை..... நான் நிறைய தடவைகள் அம்மா உரையாற்றி கேட்டு இருக்கிறேன்.. ஆனால் அன்று ஏதோ புதிதாக இருந்தது எனக்கு.... மிகவும் தெளிவாகவும், அழுத்தமாகவும் அம்மா உரையாற்றினார்... இந்த மேடையில் தனது இறுதி உரை என்பதை சுட்டிக் காட்டி நீண்ட நேரம் உரையாற்றினார்.... கடைசியில் நன்றியுரை மிகவும் சுருக்கமாக கூறப்பட்டது.... நிகழ்ச்சி முடிவில் மதிய போசன விருந்து இருந்தது.... நல்ல சாப்பாடு.... நல்ல கவனிப்பு.... 2 முறை சோறு போட்டு சாப்பிட்டேன்....
இந்த விழாவுக்கு அழைத்த போது நான் எதுக்கு இந்த விழாவுக்கு என யோசித்தேன்... வந்திருக்காவிட்டால் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்... இந்த நிகழ்ச்சியில் அனைவருமே சுட்டிக் காட்டிய அம்மா அடிக்கடி கூறும் வசனம் ஒன்று.... வெளியிட்ட நூலிலும் அதை அச்சிட்டிருந்தார்கள்..... சற்று பொறாமையாக கூட இருந்தது எனக்கு......
"தமக்கும் பிள்ளைகள் உண்டு என்பதை மனதில் வைத்து தன் பிள்ளைகள் போலவே கற்பியுங்கள்"
convey my wishes for ur amma
ReplyDeletewhen i read this i rememberd my appappa
he is also retired principal & a writer too
so proud to c ur amma
Thank u sis
Delete